search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழுத்தை அறுத்து பெண் படுகொலை"

    சின்னசேலம் அருகே பெண் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சின்னசேலம்:

    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கூகையூர் லட்சுமணபுரம் சாலை பகுதியை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு (வயது 50) விவசாயி. இவரது மனைவி சரோஜா (45). இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். 2 மகள்களும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்கள். இவரது மகன் தண்டபாணி (26). சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு அய்யாகண்ணுவும் அவரது மனைவி சரோஜாவும் உணவு சாப்பிட்டனர்.

    அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக ஊர் கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அய்யாக்கண்ணு சென்று விட்டார்.

    சரோஜா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 2 பேர் சரோஜா வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டினர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சரோஜாவை கழுத்தை அறுத்து கொலை செய்தனர். ரத்த வெள்ளத்தில் சரோஜா பரிதாபமாக இறந்தார்.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து அய்யாக்கண்ணுவின் மகன் தண்டபாணி கூகையூர் லட்சுமணபுரம் சாலை பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு இரவு வந்தார். அவர் வீட்டின் கதவை தட்டினார். கதவு தட்டும் சத்தத்தை கேட்டு மர்ம மனிதர்கள் வீட்டில் இருந்து வெளியே தப்பி செல்ல முயன்றனர். ஆனால் அந்த வீட்டில் தப்பி செல்ல வழி இல்லாததால் அந்த வீட்டிற்க்குள்ளேயே பதுங்கி இருந்தனர். தண்டபாணி நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்காததால் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றார்.

    வீட்டிற்குள் சென்று பார்த்த போது அவரது தாய் சரோஜா கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தனது தாயின் உடலை பார்த்து கதறி அழுதார். அப்போது வீட்டிற்குள் இருந்த மர்மநபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். தண்டபாணியின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

    பின்னர் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் 2 பேரையும் பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    இது குறித்து கீழ்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட சரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த மர்ம நபர்கள் 2 பேரையும் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பிடிபட்ட வாலிபர்கள் 2 பேரும் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கீழ் கல்பூண்டியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

    அய்யாகண்ணுவுக்கும் அவரது சகோதரர்களுக்கும் சொத்து தகராறு இருந்தது. சொத்து தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற பல்வேறு கோணங்களில் பிடிபட்ட வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×